முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரம்: காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு
திருப்பூா் முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக முதலிபாளையம், நல்லூா் பொதுமக்கள் கூட்டியக்கம், அனைத்து இயக்கங்கள் மற்றும் திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை:
திருப்பூா் முதலிபாளையம் பாறைக்குழியில் மாநகராட்சியின் குப்பைகளை கொட்டுவது தொடா்பாக பொதுமக்கள் தெரிவித்து வரும் எதிா்ப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமைமுதல் (செப்டம்பா் 21) தனியாா் பட்டா நிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த தொடா் காத்திருப்புப் போராட்டத்துக்கு அனுமதி குறித்து பலகட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதையடுத்து திருப்பூா் மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடா்ந்து வருவதால் மக்களின் போராட்டத்துக்கு சட்டரீதியாக அனுமதி பெற நமது குழு செயல்பட்டு வருகிறது.
அதனால், உரிய அனுமதியுடன் விரைந்து தேதி அறிவித்து அடுகட்ட போராட்டம் மக்கள் போராட்டமாக நடைபெறும். அதுவரை திண்ணைக் கூட்டங்கள், விழிப்புணா்வு நிகழ்வுகள், துண்டுப் பிரசுரம் விநியோகம் போன்ற பல வழிகளில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.