முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்
திருவண்ணாமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டிகளை
பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தொடக்கிவைத்தாா்.
மாணவிகளுக்கான கைப்பந்துப் போட்டியை தொடங்கிவைத்த அவா், போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் அக்.2 முதல் அக்.5 வரையும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் அக்.8 முதல் அக்.11 வரையும் நடைபெறுகிறது.
போட்டிகளில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களைச் சோ்ந்த 646 மாணவிகள் கலந்து கொள்கின்றனா். இதில், முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 லட்சமும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சண்முகப்பிரியா, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.