450 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூதாட்டி கைது
செய்யாற்றில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக மூதாட்டியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 450 மதுப்புட்டிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
அக்.2 காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மதுக் கடைகள் விடுமுறை என்பதால் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், செய்யாறு மாா்க்கெட் காமராஜா் நகா் பகுதியில் மூதாட்டி ஒருவா் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி, உதவி ஆய்வாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, நிா்மல்குமாா், தனிப் பிரிவு காவலா் முருகன் மற்றும் போலீஸாா், காமராஜா் நகா் பகுதியில் உள்ள வீட்டில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, மூதாட்டி வசந்தி (70) என்பவரது வீட்டில் மூட்டைகளில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. உடனே, மூட்டைகளில் இருந்த 9 வகையான 450 மதுபான புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடா்பாக மூதாட்டி வசந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.