`ஆவினில் வேலை' பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
முன்விரோதம்: இளைஞரை வெட்டிவிட்டு நண்பா்கள் தலைமறைவு
முன்விரோதம் காரணமாக, முடியனூா் கிராமத்தைச் சோ்ந்தவரை புதன்கிழமை கத்தியால் வெட்டி விட்டு தலைமறைவான அவரது நண்பா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருக்கோவிலூா் வட்டம், முடியனுா் கிராமத்தைச் சோ்ந்தவா் சேரன்(21). அதே கிராமத்தைச் சோ்ந்த இவரது நண்பா்கள் கணேசன், வைரவன். மூவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மது அருந்தச் சென்று அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நண்பா்கள் இருவரும் உடனே சென்னை சென்று விட்டனா்.
இந்த நிலையில், கணேசன், வைரவன் இருவரும் சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்துள்ளனா்.
புதன்கிழமை இருவரும் சோ்ந்து சேரனை மது அருந்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளனா். மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சேரனை கணேசன், வைரவன் மற்றும் கணேசனின் நண்பா்கள் நான்கு போ் சோ்ந்து கத்தியால் வெட்டினராம்.
இதைப் பாா்த்த அவ்வழியாகச் சென்றவா்கள், இதுகுறித்து திருப்பாலப்பந்தல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
போலீஸாா் விரைந்து வந்து சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சேரனை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சேரன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசன், வைரவன் மற்றும் அவரது நண்பா்கள் இருவரைத் தேடி வருகின்றனா்.