முல்லான்பூரில் ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் போட்டிகள்..! பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள்!
ஐபிஎல் தொடரின் 18-ஆவது சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் (மே.27) நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக பிளே-ஆஃப்ஸ் போட்டிகள் (குவாலிஃபயர் 1, எலிமினேட்டர்) பஞ்சாபின் முல்லான்பூரில் நடைபெறவிருக்கின்றன.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டன.
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
இந்தச் சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாபை குறிப்பாக அமிர்தசரை குறிவைக்க முயற்சித்தது. இந்திய ராணுவத்தின் சாதுரியத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினாலும் முறியடிக்கப்பட்டது.
இது குறித்து பஞ்சாபின் சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி அதிகாரி அர்பித் சுக்லா கூறியதாவது:
முல்லான்பூரில் நாளை (மே.29), நாளை மறுதினம் (மே.30) முக்கியமான போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. அவை குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள்.
இந்தியாவின் அனைத்து பாகங்களில் இருந்தும் மக்கள் இந்தப் போட்டியைப் பார்க்க ஆவலுடன் வருவார்கள்.
முல்லான்பூர் திடலைச் சுற்றிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று (மே.28) அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முல்லான்பூரில் அரசிதழில் பதிவு பெற்ற 65 அதிகாரிகளுடன் 2,500க்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கவரும் ரசிகர்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். அதே நேரத்தில், சோதனைகள் கடுமையாக இருக்கும். காவலர்களுக்கான மாக் ட்ரில் பயிற்சிகள் நேற்றும் இன்றும் இதற்கான மேற்கொள்ளப்பட்டன என்றார்.