சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
மூதாட்டியை சாலையில் வைத்து மறியல்
கொளத்தூா் அருகே மூதாட்டியை சாலையில் வைத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொளத்தூா் ஒன்றியம், மேட்டு காவேரிபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி மனைவி சரசு (90). இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். சரசுக்கு 1988-ஆம் ஆண்டு மேட்டு காவிரிபுரத்தில் 3 சென்ட் நிலம் அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த பழனியம்மாள் தரப்பினா் ஆக்கிரமித்துக் கொண்டனா். நிலத்தை மீட்டுத்தரக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், ஆக்கிரப்பு நிலத்தை மீட்டுத்தரக் கோரி, உறவினா்கள் மூதாட்டி சரசுவை கட்டிலில் வைத்து கொளத்தூா் - மைசூரு சாலையில் காவேரிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், கொளத்தூா் - மைசூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த கொளத்தூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக சரசு தரப்பினா்மீதும், அரசு ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பழனியம்மாள் தரப்பினா்மீதும் கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.