தில்லியில் தேர்தல் விதிகளை மீறியதாக 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!
`மேடையிலிருந்த யாரும் அந்த தவிப்பை உணரல..’ - கலங்கிய தாய்; தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சென்ற மாணவிகள்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், எம்.பி, முரசொலி, எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
சத்திரம் நிர்வாகத்தின் கீழ் கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலரை இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவதற்காக அழைத்து சென்றனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடிய மாணவிகள் அரங்கத்தில் உள்ள அறையில் உட்கார வைக்கப்பட்டனர். இந்தநிலையில் இதில் கலந்து கொண்ட மாணவியின் தாய் ஒருவர் பள்ளி நேரம் முடிந்ததும் வழக்கம் போல் தன் மகளை பள்ளிக்கு அழைக்க சென்றுள்ளார். ஆனால் பள்ளியில் தன் மகளை காணவில்லை.
பதறியபடி பள்ளி வளாகத்தில் பல இடங்களில் தேடியிருக்கிறார். ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டதற்கு முறையாக பதில் சொல்லவில்லைனு சொல்லப்படுகிறது. பின்னர், தலைமை ஆசிரியரிடம் தன் மகளை காணவில்லை என்றிருக்கிறார். அவர், `நாங்கதான் அரசு நிகழ்ச்சிக்கு அனுப்பி வச்சிருக்கோம்’னு சாதாரணமாக சொல்லியிருக்கிறார். உடனே அந்த தாய், ஓட்டமும், நடையுமாக நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சென்றுள்ளார். அங்கும் மகளை காணாமல் தேடியுள்ளார்.
இதனால் அழுகையும், தவிப்புமாக நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில் மகளை தேடியதை பார்த்த சிலர் என்னவென்று கேட்க விஷயத்தை சொல்லியிருக்கிறார். பள்ளி மாணவிகள் மேடையில் அருகே உள்ள அறையில் இருக்கிறார்கள் என்றதும் சற்றே நிம்மதியடைந்தவர் அந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு தன் மகள் இருப்பதை பார்த்ததும் கலங்கி அழுதிருக்கிறார். எங்க போறோம்னு சொல்லிட்டி போக மாட்டியா ’பெத்த மனசு பதறிடிச்சி’ என மகளிடம் பாசத்துடன் கடிந்து கட்டிக்கொண்டார். அழுகையை அடக்க முடியாமல் புடவை முந்தானையில் கண்ணீரை துடைத்துக்கொண்டார். மகள் உள்ளிட்ட மாணவிகள் அவரை சமாதானம் செய்து தேற்றினர். கொஞ்ச நேரம் ஆன பிறகே இயல்பு நிலைக்கு மாறினார்.
இது குறித்து பேசிய அங்கிருந்த சிலர், `பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவிகளை அழைத்து சென்றது ஏற்றுக்கொள்ள கூடியதில்லை. மேடையில் இருந்த யாரும் அந்த தாயின் தவிப்பை உணரவில்லை. இது போல் பல நிகழ்ச்சிகளுக்கு இப்பள்ளி மாணவிகள் அழைத்து செல்லப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் பள்ளியில் அவரிடம் உரிய அனுமதி பெற்று மாணவிகளை அழைத்து வந்தார்களா என்பதை விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சியர் பள்ளி நிர்வாகத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும்’ என்றனர்.
பள்ளி நேரத்துக்குள் நிகழ்ச்சி முடிந்து விடும் என நினைத்து தான் ஏற்பாட்டாளர்கள் கேட்டதும் மாணவிகளை அனுப்பி வைத்தோம். ஆனால் நிகழ்ச்சி முடிவதற்கு தாமதமாகி விட்டதாக பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs