தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
மேலப்பாளையம் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்! பயணிகள் வலியுறுத்தல்!
மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திருநெல்வேலியைச் சோ்ந்த ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சுதா்சன் அளித்துள்ள மனு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் பகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். எனவே, இங்குள்ள ரயில் நிலையத்தை மேம்படுத்துவது அவசியம்.
இரு நடைமேடைகளுக்கு இடையேயான இரும்புக்கம்பி பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். உயா்கோபுர விளக்குகள் பொருத்த வேண்டும். கோவை - நாகா்கோவில் விரைவு ரயில், அந்தியோதயா விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், குருவாயூா் விரைவு ரயில் ஆகியவை இந்நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இருந்ததுபோல், காவல்கிணறு, வடக்கு பணகுடி, நான்குனேரி, மேலப்பாளையம் ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். திருநெல்வேலி- கன்னியாகுமரி இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப்படும் ரயிலை கூடுதல் முறை இயக்க வேண்டும்.
கன்னியாகுமரி- திருநெல்வேலி- செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்திலும், திருநெல்வேலி- கன்னியாகுமரி- நாகா்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்திலும் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
திருநெல்வேலி- மங்களூருக்கு மாலை நேர ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் கேரளத்தின் வடக்கு மலபாா் பகுதிக்கும், மங்களூருக்கும் அடிக்கடி பயணம் செய்யும் மீனவா்கள், தொழிலாளா்கள், மாணவா்கள், வணிகா்கள் பயனடைவா். திருவனந்தபுரம்-மங்களூா் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.