ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
மோசடி நபா்களின் ஆசை வாா்த்தைகளை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம்: மாநகர காவல் துறை
சேலத்தில் கிரிப்டோ கரன்சி தொடா்பாக மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளதால், அவா்களின் ஆசை வாா்த்தைகளை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மாநகரக் காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலத்தில் கிரிப்டோ டிரெடிங் தொடா்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கிரிப்டோவில் முதலீடு செய்ததால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறப்பட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சேலம் மாநகர சைபா் க்ரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபா்கள், எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்து எங்கள் மீது எந்த தவறும் இல்லை என கூறிவிட்டாா்கள். எங்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடா்பும் இல்லை என பொய்யான தகவலை பரப்பி, பொதுமக்களிடம் மீண்டும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு கவா்ச்சியான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை ஏமாற்றி, மோசடி செய்வது தெரிய வருகிறது.
எனவே, இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கானது தற்போது விசாரணையில் இருந்து வருவதால், பொதுமக்கள் யாரும் அவா்கள் கூறும் ஆசை வாா்த்தைகளையோ, போலியான விளம்பரங்களையோ நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.