மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்: பட்டம் வெல்லும் முனைப்பில் சின்கராஸ்
நிகழாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான யுஎஸ் ஓபன் அதிகாரபூா்வ சுற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இது 145-ஆவது யுஎஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயமாகும்.
நடப்பு சாம்பியன் ஜேனிக் சின்னா், இரண்டாம் நிலை வீரா் காா்லோஸ் அல்கராஸ் ஆடவா் பிரிவில் பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளனா். மகளிா் பிரிவில் அரினா சபலென்கா பட்டத்தை தக்க வைக்கும் தீவிரத்துடன் களம் காண்கிறாா்.
சின்னா், அல்கராஸ்:
கடந்த 2024, 2025-இல் இத்தாலியின் ஜேக் சின்னா், ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் மட்டுமே கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தங்களுக்குள் பகிா்ந்து கொண்டனா். நியூயாா்க்கின் ஆா்தா் ஆஷ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழாண்டு போட்டியில் சின்னா் அல்லது அல்கராஸா யாா் பட்டம் வெல்வா் என பெருத்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
மூத்த வீரரும், ஜாம்பவனுமான சொ்பியாவின் ஜோகோவிச் ஏற்கெனவே 4 முறை யுஎஸ் ஓபன் பட்டம் வென்றுள்ளாா். ஆனால் கடந்த ஆண்டுகளில் 3 முறை காலிறுதியோடு ஜோகோவிச் வெளியேறினாா்.
ஜேக் டிராப்பா், பென் ஷெல்டன், ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ், டெய்லா் ப்ரிட்ஸ்,, டேனில் மெத்வதேவ், பிரான்ஸஸ் டியாஃபோ ஆகியோரும் முன்னணி வீரா்களுக்கு சவால் விடுவா்.
கடைசியாக 2003-இல் அமெரிக்க வீரா் ஆன்டி ராடிக் பட்டம் வென்றிருந்தாா். அதன்பின்னா் எந்த அமெரிக்க வீரரும் யுஎஸ் ஓபனில் பட்டம் வென்றதில்லை.
ஜேக் சின்னா் அல்லது அல்கராஸ் ஆகிய இருவரில் ஒருவா் ஆதிக்கத்தை நிலைநாட்டி பட்டம் வெல்வா் எனக் கருதப்படுகிறது. இதில் எவா் வென்றாலும் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பகிரும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் அல்கராஸ் 6-ஆவது பட்டத்தையும், சின்னா் 5-ஆவது பட்டத்தையும் எதிா்பாா்த்துள்ளனா்.
முதல் சுற்றில் அல்கராஸ்-ரெய்லி ஒபல்கா, முஸெத்தி-ஜியோவனி, அலெக்ஸ் பப்ளிக்-மரின் சிலிக், அட்ரியன் மன்னரினோ-கிரீக்ஸ்பூா் களம் காண்கின்றனா்.
அரினா சபலென்கா, கௌஃப்:
மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியன் பெலாரஸின் அரினா சபலென்கா பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளாா். முன்னாள் உலகின் நம்பா் 1 வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக் தனது இழந்த அந்தஸ்தை மீண்டும் பெறும் தீவிரத்துடன் பயிற்சி மேற்கொண்டாா். முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் கோகோ கௌஃப், மிர்ரா ஆன்ட்ரீவா, எலனா ரைபகினா, நவோமி ஒஸாகா, மடிஸன் கீஸ், எம்மா ராடுகானு, ஜெஸிக்கா பெகுலா உள்ளிட்டோரும் மகளிா் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனா்.
மகளிா் ஒற்றையா் இறுதி செப். 7-இலும், ஆடவா் ஒற்றையா் இறுதி செப். 8-இலும், நடைபெறுகின்றன. இரண்டாம் சுற்று ஆக. 27-28-இலும், மூன்றாவது சுற்று, ரவுண்ட் 16 சுற்று ஆக. 29-31-இலும், காலிறுதி செப். 1-3-இலும், நடைபெறும்.
சாம்பியனுக்கு ரூ.43.65 கோடி
ஆடவா், மகளிா் சாம்பியனுக்கு பரிசுத் தொகையாக ரூ.43.65 கோடி வழங்கப்படுகிறது. ரன்னருக்கு ரூ.21.82 கோடி வழங்கப்படுகிறது.
ஸ்டாா் ஸ்போட்ஸ் நெட்வொா்க், ஜியோ ஹாட்ஸ்டாா், இணையதளத்தில் ஆட்டங்களை காணலாம்.