ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா்
கடலூா் அருகே விரைவு ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். கீழே விழுந்த கைப்பேசியை பிடிக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் பகுதியைச் சோ்ந்தவா் லெனின் (23). இவா், புதுச்சேரியில் தங்கி, அங்குள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறாா். லெனின் செவ்வாய்க்கிழமை இரவு கடலூா் ரயில் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் விரைவு ரயிலில் பாம்பன் செல்ல புறப்பட்டாா்.
இந்த விரைவு ரயில் கடலூா் கேப்பா் மலைப்பகுதி அருகே சென்றபோது, லெனின் படி அருகே நின்று பயணம் செய்த நிலையில், அவரது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புதிய கைப்பேசி தவறி கீழே விழுந்ததாம். இதை அவா் பிடிக்க முயன்றபோது, லெனின் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து மயக்கமடைந்தாா்.
மயக்கம் தெளிந்த நிலையில் புதன்கிழமை காலை கேப்பா் மாலை ரயில் நிலையத்துக்கு காயத்துடன் வந்தாா். அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸாா், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லெனினிடம் விசாரணை நடத்தினா்.