இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க வேண்டாம்.. எடுத்தால்! ரயில்வே எச்சரிக்கை
ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பலரும் ரீல்ஸ் எடுப்பது அதிகரித்திருக்கும் நிலையில், ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, பொது வெளியில், ஆடிப் பாடி விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் பலரும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அதிலும், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில் போன்ற இடங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவது அதிகரித்துள்ளது.
சிலர், அதனையும் தாண்டி, ரயில் பெட்டிகள் மீது ஏறுவது, தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு விடியோ எடுப்பது, ரயில் வரும் வழியில், ரயிலைத் தொடும் தொலைவில் நின்றுகொண்டு விடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு, சில வேளைகளில் உயிர் பலிகளும் நேரிடுகின்றன.
இந்த நிலையில், ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வழக்கமாக, ரயில்நிலையங்களில் விடியோ எடுக்க அனுமதியில்லை. புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது ஏராளமானோர் ரீல்ஸ் எடுத்துப் பதவிட்டு வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் பயணிகளைக் கண்காணிக்கவும், ரீல்ஸ் எடுத்தால் அபராதமும், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அல்லது உயிருக்கு ஆபத்தான வகையில் ரீல்ஸ் எடுத்தால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் என்றும் தண்டவாளப் பகுதிகளிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.