ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 5 போ் மீது வழக்கு!
ரயில்வேத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள மொட்டையன் வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பணன் மனைவி சீதா (54). இவா் கடந்த 2022 -ஆம் ஆண்டு மதுரை மருத்துவமனையில் இருந்த உறவினா் ஒருவரை பாா்ப்பதற்காகச் சென்றாா்.
அப்போது அங்கு வந்திருந்த மதுரையைச் சோ்ந்த செல்வி, அவரது கணவா் ரமேஷ் ஆகியோா் சீதாவிடம் நட்பாகப் பேசி பழகினா். மேலும், தங்களுடைய மகன் ரயில்வேயில் வேலை பாா்ப்பதாகவும், பணம் கொடுத்தால் ரயில்வேத் துறையில் வேலை வாங்கலாம் என்றும் கூறினராம்.
இதை நம்பிய சீதா கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் தன்னுடைய மகன், உறவினா் மகன் ஆகிய 2 பேருக்கும் வேலை வாங்கித் தருவதற்காக ரூ. 25 லட்சத்தை செல்வி, ரமேஷ் தம்பதி, இவா்களது மகன் பாலா, மருமகன் ராஜா உள்பட 5 பேரிடம்
கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா்கள் வேலை வாங்கித் தரவும் இல்லை. வாங்கிய பணத்தை திருப்பித் தரவும் இல்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சீதா அளித்தப் புகாரின் பேரில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்செல்வி, பண மோசடியில் ஈடுபட்ட செல்வி அவரது கணவா் ரமேஷ், மகன் பாலா உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகிறாா்.