இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
ரஷிய விமான விபத்து: 49 பேரும் பலி!
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பேர் பலியாகினர்.
பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் இருந்து தைண்டா நகரை நோக்கி உள்ளூர் நேரப்படி பகல் 1 மணிக்கு அங்காரா ஏர்லைன்ஸின் ஏஎன்-24 விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில், 5 குழந்தைகள் உள்பட 43 பயணிகளும், 6 விமானப் பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், சீனாவின் எல்லை அருகேவுள்ள ஆமூர் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, அதன் தொடர்பை விமானக் கட்டுப்பாட்டு அறை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக, விமானத்தை தேடும் பணியை ரஷிய பேரிடர் அமைச்சகம் தொடங்கியது. விமானம் ரேடாரில் இருந்து மறைந்த பகுதியில் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.
இந்த நிலையில், தைண்டாவுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில், ஒரு சரிவானப் பகுதியில், விமானம் சிதறுண்டு கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடர்த்தியான காட்டுப் பகுதியில் விமான விபத்து நடந்துள்ள நிலையில், அப்பகுதி கரும்புகையுடன் காட்சி அளிக்கிறது.
இந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தகவல் அளித்திருப்பதாக ரஷிய பேரிடர் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் குழுவினரை ரஷிய அரசு அனுப்பிவைத்துள்ளது.