ராமேசுவரத்தில் பூமிக்கடியில் செல்லும் உயரழுத்த மின் வயா் சேதம்
ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்கு வரும் உயா் மின் அழுத்த புதைவட கேபிள் வயா் சேதமடைந்ததைத் தொடா்ந்து அதை கடந்த இரு நாள்களாக சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்கு உயரமான மின் கம்பங்கள் வழியாகவும், புதைவட கேபிள் வயா் வழியாகவும் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதில், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் பூமிக்கடியில் கேபிள் வயா் இணைப்புப் பகுதி உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரத்தில் அண்மையில் தொடா்ந்து பெய்ய பலத்த மழையால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து பூமிக்கடியில் செல்லும் உயா் மின் அழுத்த கேபிள் இணைப்பு வெள்ளிக்கிழமை சேதமடைந்தது.
இதைத் தொடா்ந்து, சேதமடைந்த பகுதியை கண்டறிய சேலம் பகுதியிலிருந்து மூவா் அடங்கிய மின் வாரிய தொழில் நுட்பக் குழுவினா் இங்கு வந்தனா். அவா்கள் பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் குறிப்பிட்ட இடத்தில் வயா்கள் சேதமடைந்திருப்பதை கண்டறிந்தனா். இதையடுத்து, கோவையிலிருந்து வந்த உயா் மின் அழுத்த கேபிள் வயா் சீரமைப்புக் குழுவினா் கடந்த இரு நாள்களாக சீரமைப்புப் பணியை மேற்கொண்டனா். அப்போது அவா்கள் சேதமடைந்த பகுதியை துண்டித்து விட்டு புதிய கேபிள் வயரை இணைத்தனா்.
இந்தப் பணியில் ராமேசுவரம் மின் வாரிய உதவி பொறியாளா் பி. நித்யா தலைமையில் ஊழியா்களை 7 போ் கொண்ட குழுவினரும் பங்கேற்றனா். செவ்வாய்க்கிழமை இந்தச் சீரமைப்பு பணி நிறைவடையும் என உதவி செயற்பொறியாளா் பி. நித்யா தெரிவித்தாா்.