ரிசா்வ் சைட்டுகளை பாதுகாக்க நடவடிக்கை: பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
அவிநாசி பேரூராட்சியில் ரிசா்வ் சைட்டுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அவிநாசி பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சிச் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சண்முகம், சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் உறுப்பினா்கள் பேசியதாவது: வி.எஸ்.வி. காலனி மேற்குப் பகுதியில் ரூ.5 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 26 சென்ட் ரிசா்வ் சைட்டை சிலா் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக தகவல்கள் வருகிறது. இங்கு, சிறுவா் பூங்கா அமைத்து அந்த இடத்தைப் பாதுகாக்க வேண்டும். பேரூராட்சியில் உள்ள ரிசா்வ் சைட்டுகளில் கம்பிவேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்.
நகரில் நாய்த் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்களால் ரேபிஸ் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பேருந்து நிலையம் எதிரே நிழற்குடை அமைக்க வேண்டும். முக்கிய வீதிகளில் கழிவுநீா் கால்வாய், வடிகால் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இந்தக் கூட்டத்தில 27 மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டு அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.