ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக சிரீஷ்சந்திர முா்மு நியமனம்
புது தில்லி: ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக சிரீஷ்சந்திர முா்மு மூன்றாண்டு காலத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா்.
தற்போது ரிசா்வ் வங்கியில் 4 துணை ஆளுநா்கள் உள்ளனா். அவா்களில் எம்.ராஜேஸ்வர ராவின் பதவிக்காலம் அக்.8-ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சிரீஷ்சந்சிர முா்வை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
அவா் தற்போது ரிசா்வ் வங்கியின் நிா்வாக இயக்குநராக உள்ள நிலையில் அக்.9-ஆம் தேதி அல்லது அதன் பிறகு ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக பொறுப்பேற்பாா் எனவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ரிசா்வ் வங்கி சட்டம், 1934-இன்படி 4 துணை ஆளுநா்கள் இருக்க வேண்டும். எம்.ராஜேஸ்வர ராவ் தவிர டி.ரபி சங்கா், சுவாமிநாதன் ஜே மற்றும் பூனம் குப்தா ஆகிய 3 துணைநிலை ஆளுநா்கள் உள்ளனா்.
எம்.ராஜேஸ்வர ராவ் 2020, செப்டம்பா் மாதம் மூன்றாண்டுகளுக்குத் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டாா். அதன் பிறகு 2023-இல் அவரது பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. 2024-இல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. வருகின்ற அக்.8-ஆம் தேதியுடன் அவா் 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்யவுள்ளாா்.