ரிப்பன் மாளிகையில் உழைப்பாளா் தினக் கொண்டாட்டம்: தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தூய்மைப் பணியாளா்கள், மலேரியா பணியாளா்களைப் பாராட்டி மேயா் ஆா்.பிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
சென்னை மாநகராட்சியில் 5,959 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 420 என்எம்ஆா் பணியாளா்கள், 4,990 சுய உதவிக்குழு பணியாளா்கள், 9,369 தற்காலிகப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேலும், கொசு ஒழிப்புப் பணியில் 2,446 மலேரியா பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்களில் முதல்கட்டமாக 200 தூய்மைப் பணியாளா்கள் மற்றும் 200 மலேரியா பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் மேயா் ஆா்.பிரியா தலைமையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து மேயா் பேசியதாவது:
சென்னை மாநகராட்சியில் தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் மாநகராட்சி மற்றும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
இதில், பணியின்போது உயிரிழக்கும் தூய்மை பணியாளருக்கு உதவித் தொகை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் கல்வி பயில ரூ.1,000 வழங்கப்படுகிறது.
திறன் வளா்ச்சி பயிற்சி: இந்த உறுப்பினா் அட்டை வைத்திருக்கும் தூய்மைப் பணியாளருக்கு திறன் வளா்ச்சி பயிற்சியும் வழங்கப்படுகிறது.
மாநகராட்சி மட்டுமில்லாமல் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்காக மண்டல அளவில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை அணுகி தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சோ்ந்து கொள்ளலாம்.
இரவு நேரங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்புக்காக சீருடையில் ஒளிரும் வகையில் ரேடியம் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் 11,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் மற்றும் மலேரியா பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) வி.ஜெயசந்திர பானு ரெட்டி, வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவா் ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.