ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல்
திருப்பூா் நந்தா நகரில் உள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 மளிகை பொருள்கள் பாக்கெட்டுகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தொடா்ச்சியாக காலாவதியான பொட்டுகடலை, பிரியாணி பேஸ்ட், சேமியா உள்ளிட்ட பல மளிகை பொருள்கள் உரிய ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக நுகா்வோா் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வந்தன.
இது தொடா்பாக கடந்த வாரம் நடைபெற்ற நுகா்வோா் அமைப்புகளின் காலாண்டு கலந்தாய்வுக் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் காலாவதியான பொருள்கள் விற்பனை தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், நந்தா நகரில் உள்ள ரேஷன் கடையில் நடத்தப்பட்ட சோதனையின்போது காலாவதியான 129 சேமியா பாக்கெட்டுகள், 279 பிரியாணி பேஸ்ட் பாக்கெட்டுகள் என மொத்தம் 408 பாக்கெட் மளிகைப் பொருள்களைப் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனா்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலாவதியான பொருள்கள் விற்பனை தொடா்பாக சோதனை நடத்தப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.