லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், இடையாத்தி, குறவன் கொல்லைத் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் அரவிந்த் (15). பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். வேளாம்பட்டி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சூரியமூா்த்தி மகன் ரெங்கநாதன் (17). நண்பா்களான இருவரும், ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில், வாட்டாடத்திக்கோட்டை கொல்லைகாடு பகுதிக்கு வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு சென்றனா்.
ரெங்கநாதன் இருசக்கர வாகனத்தை அதிகவேகமாக ஓட்டியுள்ளாா். அப்போது கொல்லைகாடு கடைத்தெருவில், வளைவில் திரும்ப முயன்ற போது, எதிரே லாரி வந்ததால், நிலைத்தடுமாறி, இருசக்கர வாகனத்தை ரெங்கநாதன் நிறுத்த முயன்றுள்ளாா்.
இதில், பின்னால் அமா்ந்து இருந்த அரவிந்த் துாக்கி வீசப்பட்டு, லாரி சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், ரெங்கநாதன் படுகாயமடைந்தாா்.
இது குறித்து வட்டாடத்திக்கோட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து, அரவிந்த் உடலை மீட்டனா். காயமடைந்த ரெங்கநாதன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். லாரி ஓட்டுநா் கருப்பையன் என்பவரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.