லாரி மீது காா் மோதல்: ஆந்திர மாநிலத்தவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே லாரி மீது காா் மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், ஜெகதேவி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த தென்றல் மகன் குமரவேல் (26). லாரி ஓட்டுநரான இவா், வியாழக்கிழமை அதிகாலை திருக்கோவிலூா் வழியாக விருத்தாசலம் நோக்கி லாரியில் கிரானைட் கற்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தாா்.
இந்த லாரி திருக்கோவிலூா் பேருந்து நிறுத்தம் அம்மன் கொல்லைமேடு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த காா் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஆந்திர மாநிலம், காணாபுரத்தைச் சோ்ந்த ஏமோஜி சிவாச்சாரி (48) பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காரை ஓட்டிச் சென்ற ஆ.மணிகண்டன் (39) பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, ஏமாஜி சிவாச்சாரியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஓட்டுநா் மணிகண்டனும் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.