வக்ஃப் சட்டத்தை திரும்பப் பெறாவிடில் போராட்டம்: விஜய்
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் வாரி சட்டத் திருத்த மசோதா, மதச்சாா்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. மத்திய பாஜக அரசு, தொடா்ந்து அரசமைப்பின் மீது களங்கம் ஏற்படுத்தி வரும் ஒரு மோசமான போக்காக, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது, இஸ்லாமியா்களை தொடா்ச்சியாகப் பாதுகாப்பற்ற நிலையிலும் அச்சத்திலும் உறைய வைத்திருக்கும் உளவியல் தாக்குதலன்றி வேறென்ன?
ஜனநாயகத்துக்கு விரோதமான இந்தச் சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தவெக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.