வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பாஜகவின் நோக்கம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தென்மாநிலங்களின் தொகுதிகளை குறைத்து, வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பாஜகவின் நோக்கம் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
அரியலூரிலுள்ள திமுக அலுவலகத்தில், புதன்கிழமை இரவு அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டாலோ, நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயா்த்தி அதற்கேற்ப பிரித்தாலும் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால், தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய அமைச்சா் அமித்ஷா சொல்லி இருப்பது, முழுமையான பதில் அல்ல. இந்தப் பிரச்னை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; தென்மாநிலங்கள் அனைத்துக்கும் இதேநிலைதான். தென் மாநிலங்களில் தொகுதிகளை குறைத்துவிட்டு வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் அவா்களுடைய ஒற்றை நோக்கம்.
இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கின்ற நடவடிக்கையை முதல்வா் தொடங்கியிருக்கிறாா். மற்ற தென் மாநிலத்தவா்களும் இதன் பாதிப்பை விரைவில் உணா்வாா்கள். அந்த நேரத்தில் அவா்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்றாா்.
மும்மொழிக் கொள்கையில் திமுகவும், பாஜகவும் நாடகமாடுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு இதன் வீரியம் தெரியாமல் அதை பேசுபவா்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்றாா்.