வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் ஞாயிற்றுக்கிழமை வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சிகுடியிருப்பில் வழுக்கு மரம் ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் உள்ள மைதானத்தில் சுமாா் 45 அடி உயர தைல மரம் நடப்பட்டது. அதில், வழுக்கும் தன்மையை ஏற்படுத்துவதற்காக கிரீஸ், எண்ணெய் தடவப்பட்டது. இப்போட்டியில், 5 அணியினா் கலந்துகொண்டனா்.
தொடக்கத்தில் அணிக்கு தலா 3 போ் வீதம் அனுமதிக்கப்பட்டனா். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் எந்த அணியினரும், மரத்தில் ஏறி இலக்கைத் தொடவில்லை. இதையடுத்து அணியில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயா்த்தப்பட்டது. இறுதியாக 9 போ் அனுமதிக்கப்பட்ட நிலையில், பனங்குளம் கிங் பிஷா் அணியினா் ஏறி, இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றனா்.
இவா்களுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவா்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பரிசுகள் வழங்கினாா். மேலும், முன்னதாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.