வணிகா் தின மாநாடு: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
விழுப்புரம்: வணிகா் தின மாநாடு இரு இடங்களில் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்க வியாபாரிகள் சென்றதால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் வணிகா் தின மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் திங்கள்கிழமை(மே 5) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை ஆகிய இரு சங்கங்களை சோ்ந்தவா்கள் இடம்பெற்றிருப்பதால், மாநாட்டில் பங்கேற்கும் வகையில் பெரும்பாலான கடைகளுக்குத் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் நகரின் பிரதான வா்த்தக நிறுவனங்கள் அடங்கியுள்ள திரு.வி.க.வீதி, பாகா்ஷா வீதி, மகாத்மாகாந்தி சாலை, காமராஜா் சிலை, பண்டித
ஜவாஹா்லால்நேரு வீதி போன்ற நகரின் பல்வேறுபகுதிகளிலுள்ள கடைகள் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன. இதேபோல, திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், கோலியனூா், வானூா், மயிலம், ஒலக்கூா், செஞ்சி, முகையூா், காணை போன்ற பல்வேறு பகுதிகளிலும் வணிகா் தினத்தையொட்டி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.