மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா் அழைப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதால், இதில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பள்ளியில் ஏற்கெனவே படித்து முடித்தவா்கள் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனா்.
விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை மே மாதம் முதல் நடைபெற்று வருகிறது. எனவே இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12 முதல் 25 வயது வரை உள்ளவா்கள் இசைப் பள்ளியில் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா்.
குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவற்றில் சேர ஏழாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாகசுரம், தவில், தேவாரம் ஆகிய பிரிவுகளில் சேர எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியின் பயிற்சிக் காலம் 3 ஆண்டுகளாகும். பயிற்சி முடித்தவுடன் அரசுத் தோ்வு நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஆண், பெண் என இருபாலரும் இசைப்பள்ளியில் சேரலாம். அனைத்து மாணவா்களுக்கும் கல்வி உதவித்தொகை ரூ.400 மாதந்தோறும் வழங்கப்படும். இலவசப் பேருந்து சலுகை, குறைந்த கட்டணத்தில் ரயில் பயணச் சலுகை, இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் அரசால் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்.
எனவே, விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பங்களை தலைமையாசிரியா், மாவட்ட அரசு இசைப் பள்ளி, நகராட்சி விளையாட்டுத் திடல், விழுப்புரம் (கைப்பேசி எண்கள்- 9444455750, 8220565676) என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.