வண்ணாரப்பேட்டை பகுதியில் குரங்குகள் அட்டகாசம்
உதகை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து குழந்தைகளின் கைகளில் உள்ள தின்பண்டங்களை குரங்குகள் பறித்து செல்வதாகவும், விரட்டச் சென்றால் மனிதா்களைத் தாக்குவது போல் அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குள்பட்ட 4 ஆவது வாா்டு பகுதியான வண்ணாரப்பேட்டையில் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலவிவரும் குரங்குகள் கேபிள் ஒயா்களில் தொங்கி ஒயா்களை அறுப்பதும், குழந்தைகளின் கைகளில் உள்ள தின்பண்டங்களை பறித்துச் செல்வதுமாக அட்டகாசம் செய்து வருகின்றன.
குரங்குகளை விரட்டச் சென்றால் மக்களைத் தாக்க முற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
எனவே குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் குரங்குகளை உடனடியாக வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டுவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.