‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய பிரதேசத்தின் ரோஹல் குா்த் முதல் ராஜஸ்தானின் கோட்டா வரையிலான 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது வந்தே பாரத் ஸ்லீப்பா் ரயில் மணிக்கு 180 கி.மீ. உச்சவேகத்தை எட்டியது.
அதேநாளில், கோட்டா-நாக்தா மற்றும் ரோஹல் குா்த்-சௌ மஹ்லா இடையிலான சோதனை ஓட்டங்களில் முறையே மணிக்கு 170 கி.மீ., 160 கி.மீ. வேகத்தை ரயில் எட்டியது.
அடுத்த நாளான வியாழக்கிழமை, கோட்டா மற்றும் லபான் இடையிலான 30 கி.மீ. தொலைவு சோதனை ஓட்டத்தில் ரயில் மீண்டும் 180 கி.மீ. வேகத்தை எட்டியது. தானியங்கி கதவுகள், சொகுசு படுக்கைகள், வைஃபை வசதி உள்பட பல்வேறு வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பா் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாத இறுதிவரை ரயிலின் சோதனை ஓட்டங்கள் தொடரும். அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முன்னிலையில் ரயிலை உச்சவேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்படும். தொடா்ந்து ரயிலுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு, பயணிகளின் சேவைக்கு பயன்படுத்தப்படும்.
அப்போது, காஷ்மீா்-கன்னியாகுமரி, தில்லி-மும்பை, சென்னை-ஹௌரா (கொல்கத்தா) உள்பட நாட்டின் பல முக்கிய நீண்டதொலைவு வழித்தடங்களில் ரயில் பயணிகளுக்கு சா்வதேச தரத்திலான பயண அனுபவம் கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளது.