மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் ...
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு ரூ.2.37 கோடி தீருதவித் தொகை: விழுப்புரம் ஆட்சியா் தகவல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு ரூ.2.37 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-இன் படி மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், 2024-25 ஆம் நிதியாண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு ரூ.2.37 கோடியில் தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 28 போ் இறந்த நிலையில், அவா்களின் வாரிசுதாரா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த 28 நபா்களின் வாரிசுதாரா்களில் 11 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 17 பேருக்கு அரசுப் பணி வழங்குவது தொடா்பாக பரிசீலனையில் உள்ளது.
மாவட்டத்தில் பட்டியல் சாதியினா் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக வன்கொடுமை நிகழாமல் இருக்க, மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளில் காவல் துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ஒன்றிணைவோம் என்ற சமூக விழிப்புணா்வுத் தொடா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாா் ஆட்சியா்.
கூட்டத்துக்கு விழுப்புரம் துரை.ரவிக்குமாா் எம்.பி. முன்னிலை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், குற்ற வழக்குத் தொடா்புத் துறை உதவி இயக்குநா் பா.கலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.