பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜன. 9-இல் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 9-இல் தொடங்கி, 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்றாா் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட அய்யனாா் கோயில் தெரு மற்றும் ரங்கநாதன் தெரு ஆகிய பகுதிகளிலுள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து, மேலும் அவா் பேசியது:
பொங்கல் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின்அறிவித்தாா்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 6,19,756 குடும்ப அட்டைதாரா்கள், 435 இலங்கைத் தமிழா்கள் முகாம்களில் வசிப்பவா்கள் என மொத்தமாக 6,20,191 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாள், நேரம் குறிப்பிட்டு வீடு, வீடாகச் சென்று நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் டோக்கனை வழங்குவா். முதல் நாளில் காலை மற்றும் மாலையில் தலா 100 டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 9-இல் தொடங்கி 12-ஆம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும். விடுபட்டவா்கள் ஜனவரி 13-ஆம் தேதி சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் சி. பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏ.க்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ் முன்னிலை வகித்தனா். இதில் விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா் சித்திக் அலி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், புருஷோத்தமன், பத்மநாபன், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.