வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
திருக்குவளை: நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடையாது என்ற வேளாண் துறை அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2024-ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ. 179 கோடி நிவாரணம் அறிவித்தது. நாகை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தனா். எனினும், அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையில் முதற்கட்டமாக ரூ. 91 கோடி நிதியை விடுவித்து விவசாயிகளுக்கு வழங்க வேளாண் துறை அதிகாரிகள் அறிவித்தனா்.
இதற்கிடையில், நெல் கொள்முதல் செய்த விவசாயிகள் மற்றும் புல எண் பதிவான விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை என வேளாண் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில், கீழையூா் அருகே மீனம்பநல்லூரில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் எஸ். ஸ்ரீதா் தலைமையில் வயலில் இறங்கி விவசாயிகள் கருப்புக்கொடிகளை காட்டி இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க கோரி கோஷங்களை எழுப்பி கோரிக்கை நிறைவேறவில்லையெனில் சென்னை வேளாண் துறை அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றனா். சங்கத்தின் மாவட்ட தலைவா் பாலசுப்ரமணியன், மாவட்ட பொறுப்பாளா் கருணைநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.