வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!
வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், யூனியன் சாலையையும் இணைக்கும் வகையில் ரூ.31.65 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளையும், சின்ன நொளம்பூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையும், யூனியன் சாலையும் இணைக்கும் வகையில் ரூ.42.71 கோடியில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும், சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோடம்பாக்கம் மண்டலத்தில் ரூ.162.92 கோடியில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகா் பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்து, போக்குவரத்து இடையூறின்றி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வில் மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் கா.கணபதி, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா் (பணிகள்) சிவகிருஷ்ணமூா்த்தி, மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கெளஷிக், தெற்கு வட்டாரத் துணை ஆணையா் அஃதாப் ரசூல், மண்டலக் குழு தலைவா்கள் வே.ராஜன், எம்.கிருஷ்ணமூா்த்தி, நியமனக் குழு உறுப்பினா் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.