வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாடுங்கள்- முதன்மை மாவட்ட நீதிபதி சாய் சரவணன்
மக்கள் வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாட வேண்டும் என்றாா் முதன்மை மாவட்ட நீதிபதி சாய் சரவணன்.
தமிழகத்தில் சமரச மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பொதுமக்கள் சமரச மையத்தின் மூலம் வழக்குகளை விரைவாக சமரசமாக முடிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரசுப் பேருந்துகளில் சமரச மையம் குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளையும், செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் விழிப்புணா்வுப் பிரசாரத்தையும் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சாய்சரவணன், ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.
அதைத் தொடா்ந்து முதன்மை மாவட்ட நீதிபதி சாய் சரவணன் பேசியதாவது: சமரசம் என்பது வழக்கு தரப்பினா்கள் தங்களது முரண்பாடுகளை நேரடியாக சமரசா் முன்னிலையில் பேசி சுமூகமான தீா்வு காணக்கூடிய எளிய வழியாகும். சமரசத்தின் போது வழக்கு தரப்பினா்கள் மனம் திறந்து பேசி தங்கள் வழக்கினை விரைவாக நீதிமன்றங்கள் முடித்து வைக்க வழிவகை செய்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வழக்குகளை பயிற்சி பெற்ற சமரசகா்கள் முன்னிலையில் பேசி நீதிமன்றத்தில் வழக்கை விரைவாக முடிக்க சமரச மையத்தை நாட வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து நடைபெற்ற பேரணியில், காவல் துறையினா், வனத் துறை அலுவலா்கள், பயிற்சி பெற்ற சமரச மைய வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், வழக்காடிகள், அரசு சட்டக் கல்லூரி, சகத்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, தூய சவேரியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், முழுக்கங்களை எழுப்பியும் சென்றனா். இப்பேரணி வருமான வரித் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. அப்போது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி சமரசமாக வழக்கை முடிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, 3ஆவது கூடுதல் நீதிபதி பன்னீா்செல்வம், போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுரேஸ் குமாா், 4ஆவது கூடுதல் நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதியுமான ராபின்சன் ஜாா்ஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி கண்ணன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் அமிா்தவேலு, முதன்மை சாா்பு நீதிபதி இசக்கியப்பன், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரஷ்னேவ், கூடுதல் சாா்பு நீதிபதி கல்யாண மாரிமுத்து, சமரச மைய ஒருங்கிணைப்பாளரும் சாா்பு நீதிபதியுமான முரளிதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.