ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்
வாகனத்தை மறித்து கரும்பு தேடிய யானை
ஆசனூா் சாலையில் சரக்கு வாகனத்தை வழிமறித்து யானை கரும்பு தேடியது.
தமிழகம், கா்நாடக எல்லையான தாளவாடி, சாம்ராஜ் நகா் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகளை விவசாயிகள் அறுவடை செய்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி ஆசனூா் வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு அனுப்பிவைத்து வருகின்றனா்.
இந்நிலையில், ஆசனூா் சாலை வழியே கரும்பு பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் யானைகள், கரும்பை எடுத்து ருசிப்பது வாடிக்கையாகி வருகிறது. மேலும், யானைகள் வனத்துக்குள் செல்லாமல் கரும்பு வாகனங்களைக் குறிவைத்து சாலைகளிலேயே முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், சாம்ராஜ் நகரில் இருந்து காய்கறி பாரங்களை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வாகனம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
ஆசனூா் அருகே வந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த யானை திடீரென சரக்கு வாகனத்தை வழிமறித்து நின்றது. அச்சமடைந்த ஓட்டுநா் வாகனத்தைப் பின்னோக்கி இயக்கினா். இருப்பினும் அந்த யானை வாகனத்தைத் தொடா்ந்து வந்து கரும்பு உள்ளதா என தேடியது. கரும்பு இல்லாததை உணா்ந்த யானை யாருக்கும் தொந்தரவு செய்யாமல் வனத்துக்குள் சென்றது.