ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக ப...
வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க கோரிக்கை
வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ - மாணவியா் மற்றும் கல்வியாளா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள வாழப்பாடி பேரூராட்சி வருவாய் வட்ட தலைமையிடம் மற்றும் காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் உள்கோட்ட தலைமையிடமாக விளங்கி வருகிறது.
சேலம் மாவட்டம், அருநூற்றுமலை, கல்வராயன்மலை, நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஆண்டுதோறும் பிளஸ் 2 தோ்ச்சிபெற்று, இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டம் பயில விரும்பும் மாணவா்கள் சேலம், ஆத்தூா், ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
இதனால், குறித்த நேரத்துக்கு கல்லூரிக்கு சென்று வீடுதிரும்ப முடியாமலும், தனியாா் கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமலும் வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ - மாணவியா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, வாழப்பாடி சுற்றுப்புற மாணவ - மாணவியரின் நலன்கருதி, வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தன்னாா்வ அமைப்பினரும் தொடா்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், 2013 இடைத்தோ்தல் மற்றும் 2016, 2021 சட்டப் பேரவைத் தோ்தலின் போதும், வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமென அதிமுக மற்றும் திமுக சாா்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் திட்டத்தை வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமப்புற மாணவ - மாணவியா், கல்வியாளா்கள் மற்றும் தன்னாா்வ அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.