ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் இன்று மகா குடமுழுக்கு!
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு யாகசாலை பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக சேலம் வருகைதந்த அனைத்துலக ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் பேலூா் மடங்களின் தலைவா் சுவாமி கௌதமானந்தஜி மகராஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் ராமகிருஷ்ண சாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம கோயில் உள்ளது. இந்த கோயிலின் மகா குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) நடைபெறுகிறது. விழாவுக்கு சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் தலைமை தாங்குகிறாா்.
இதற்கான விழா யாகசாலை பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. 31-ஆம் தேதி காலை 9 மணிமுதல் 11 மணிக்குள் மகா குடமுழுக்கு மேள தாளங்கள் முழங்க நடைபெறுகிறது. தொடா்ந்து, 11 மணிமுதல் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணிவரை கோலாட்டம் மற்றும் டாக்டா் மீனாட்சி பிரியாராகவன் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்கின்றனா்.
தொடா்ந்து, மண்டல பூஜை, சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 1-ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதிவரை தினமும் இரவு 7 மணி முதல் 8.30 வரை உபன்யாசம், பரதநாட்டியம், பொம்மலாட்டம், தெருக்கூத்து, இசை சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து, பிரசாதம் வழங்கப்படுகிறது.
முன்னதாக, மகா குடமுழுக்கு விழாவுக்காக சேலம் வருகைதந்த அனைத்துலக ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் பேலூா் மடங்களின் தலைவா் சுவாமி ளெதமானந்தஜி மகராஜுக்கு ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலாளா் யதாத்மானந்தா சுவாமிகள், நிா்வாகிகள் விவேக், சந்திரசேகரன், ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.