கூடுதல் மகசூல்பெற மாமரங்களை கவாத்து செய்ய செய்ய வேண்டும்!
மாம்பழம் அறுவடை பருவம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிா்வரும் ஆண்டு தரமான கூடுதல் மகசூல் பெற மா மரங்களை ‘கவாத்து’ செய்ய வேண்டுமெனவும், ‘கல்தாா்’ முறையை கைவிட வேண்டுமெனவும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சேலம் அயோத்தியாப்பட்டணம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் கோதைநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் மட்டும் பெரியகவுண்டாபுரம், வரகம்பாடி, உடையாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 1200 ஏக்கா் பரப்பளவில் அல்போன்சா, ஹிமாம்பாசந்த், சேலம் பெங்களூரா, குண்டு உள்ளிட்ட உயர்ரக மாம்பழங்கள் சாகுபடியாகிறது.
மா மரங்களில் மகசூல் அறுவடை முடிந்ததும் முதிா்ந்த, நோயுற்ற கிளைகளை கவாத்து செய்வது அவசியமாகும். அடி மரத்தில் இருந்து வளரும் பலன் தராத நீா் தண்டுகளையும் வெட்டுக் கத்திரி, கவாத்து ரம்பம், கிளை வெட்டும் கத்தியைக் கொண்டு அகற்றிட வேண்டும்.
மா மரங்களில் கவாத்து செய்வது மூலம் சூரிய ஒளி போதிய அளவிற்கு கிடைத்து புதிய கிளைகள் துளிா்த்து அதிக எண்ணிக்கையில் மகசூல் பெற முடியும். கவாத்து செய்யப்பட்ட கிளையின் வெட்டுப்பட்ட பகுதி வெய்யிலில் பாதிக்காமல் இருக்கவும், தண்டு துளைப்பான் பாதிப்பில் இருந்து கிளையை பாதுகாக்கவும், வெட்டு காயம்பட்ட பகுதியின் மேல் போா்டோ கலவை அல்லது காப்பா் ஆக்சிகுளோரைடு போன்ற ஊடுருவி பாயும் பூஞ்சை கொல்லியை பசை அளவில் தடவலாம். கூடுதல் விபரங்களை பெற தோட்டக்கலைத்துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.
கல்தாா் முறையை கைவிட வேண்டும்: மா மரங்களில் கல்தாா் என்ற வளா்ச்சி ஊக்கி மருந்து, மா மரங்களின் பூக்கும் தன்மையை இயல்புக்கு அதிகமாகவும், பருவ காலத்திற்கு முன்பே உற்பத்தி செய்யவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக மகசூல் குத்தகைக்கு விடும் தருணத்தில் செய்யப்படும் இந்த கல்தாா் முறையால் பருவத்திற்கு மாறாகவும், அளவுக்கு அதிகமாகவும் விளைச்சல் ஏற்பட்டு மா மரங்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பட்டுப்போவது தெரிய வருகிறது. எனவே, முறையான வழிகாட்டுதலின்றி கல்தாா் முறை பயன்படுத்தி மகசூல் பெறுவதை விவசாயிகள் கைவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.