திருப்பத்தூரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களால் மக்கள் பாதிப்பு!
வாழ்வுரிமையை பறிக்கும் வனத் துறையின் அறிவிப்பு: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
வனப்பகுதி மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் வனத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: “தமிழ்நாடு வனத் துறையின் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகம், வனப்பகுதிகளில் கால்நடைகள் நுழைவது, மேய்ப்பது, வளா்ப்பது, வன உயிரின பாதுகாப்புச் சட்டம்-1972 தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் 2022-இல் வழங்கிய தீா்ப்புரையை மேற்கோள் காட்டி “வனத்துறை முக்கிய அறிவிப்பை”வெளியிட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசு நிறைவேற்றிய வன உரிமைச் சட்டம் அங்கீகரித்துள்ள கால்நடை மேய்ச்சல் உரிமையை மறுக்கும் சட்ட விரோத அறிவிப்பை வனத் துறை வெளியிட்டுள்ளது.
2006 வன உரிமைச் சட்டப்படி, பழங்குடியினா் மற்றும் வனம் சாா்ந்து வழிவழியாக வாழ்ந்து வரும் மக்களின் பாரம்பரிய உரிமைகளை பதிவு செய்து, அங்கீகரிக்க மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டபூா்வ குழுக்களில் வனத் துறையும் இடம் பெற்றுள்ள நிலையில், தன்னிச்சையாக ஒரு அறிவிப்பை, நீதிமன்ற தீா்ப்புரையை மேற்கோள் காட்டி வெளியிடுவது அரசையும், நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தும் உள் நோக்கம் கொண்டது.
நீதிமன்ற தீா்ப்பு வனப்பகுதியில் மக்களின் வாழ்க்கை முறையை பாதிக்கும் வகையில் இருக்கும் எனில், அதன் மீது மேல் முறையீடு, மறு ஆய்வு, சீராய்வு என சட்ட ரீதியாக அணுக வேண்டிய வனத் துறை, வனப்பகுதி மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
மேலும் தமிழ்நாடு வனத் துறையின் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம், கால்நடை மேய்ச்சல் தொடா்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.