விகடன் இணையதள முடக்கம்: ``அதிகாரத்தின் வெட்கக்கேடான அத்துமீறல்" - Editors Guild of India கண்டனம்
அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் 20 மணி நேரத்துக்கும் மேலாக கை, கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இதுகுறித்து எதுவும் பேசியதாக தெரியவில்லை. இதை விமர்சித்து விகடன் வலைப்பக்கத்தில் கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க அரசு, எந்த முன்னறிவிப்புமின்றி, விகடன் வலைப்பக்கத்தை முடக்கியிருக்கிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடு இந்திய ஊடகவியலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கருத்துரிமை, ஊடகச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வந்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் Editors Guild of India அமைப்பு மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``பிரதமரை சித்தரிக்கும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டதற்காக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால், எந்தவொரு உரிய நடைமுறையும் இல்லாமல், தமிழ் பத்திரிகை இணையதளமான Vikatan.com சமீபத்தில் முடக்கப்பட்டதில் இந்தியப் பத்திரிக்கைகள் ஆசிரியர் சங்கம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. பத்திரிக்கைகளில் வரும் கார்ட்டூன்கள் எப்போதும் ஒரு சட்டபூர்வமான வழிமுறையாகவே இருந்து வருகிறது. ஆனால், அதற்காக விகடன் வலைத்தளத்தை திடீரென முடக்குவது அதிகாரிகளின், அதிகாரத்தின் வெட்கக்கேடான அத்துமீறலாகும்.

படைப்பின் பின்னணியில் உள்ள கார்ட்டூனிஸ்ட் சமூக ஊடகங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு, கொலை மிரட்டல்கள்கள் அனுப்பப்படுவதை அறிந்து வேதனையடைகிறோம். ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவரின் புகாரின் பேரில், எந்தவித முன்னறிவிப்புகள் இல்லாமல், ஆனந்த விகடனுக்கு - நியாயமான விசாரணைக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வலைப்பக்கம் தன்னிச்சையாக முடக்கப்பட்டதற்குப் பின்னரே உரிய நடைமுறை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த முழு நிகழ்வும் அடாவடித்தனத்தையே வெளிப்படுத்துகிறது. நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்த கவலைகள் வளர்ந்து வருகிறது. வலைத்தளத்தை முடக்குவது வெளிப்படைத்தன்மையை மதிக்கும் இந்தியாவின் ஜனநாயக மரபுகளுக்கு இழுக்கு." எனக் குறிப்பிட்டிருக்கிறது.