சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
விகடன் செய்தி: ஏழை மருத்துவ மாணவிக்கு ஸ்மார்ட் போன், லேப்டாப், ரூ.1 லட்சம் வழங்கிய அருண் நேரு எம்.பி
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாரி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பிளஸ் டூ வரை படித்து 600க்கு 573 மதிப்பெண் எடுத்தார்.
இதோடு நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பூமாரிக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்) படிக்க இடம் கிடைத்திருக்கிறது.
பூமாரியின் பெற்றோர் முத்துபாண்டி - பொன்னழகு. முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், தாய் பொன்னழகு விறகு வெட்டி விற்பனை செய்து பூமாரி மற்றும் அவருடன் பிறந்த 2 பேரையும் வளர்த்து வருகிறார்.
பூமாரியின் தாத்தா, பாட்டி ஆடு மேய்த்து வருகிறார்கள். ஏழ்மையான சூழலில் பிறந்து பிளஸ்டூ மற்றும் நீட்டில் நல்ல மதிப்பெண் எடுத்த பூமாரி பற்றி, 'திருச்சுழி: ``எங்க ஊரில் முதல் MBBS'' -விறகு வெட்டி மகளைப் படிக்க வைத்த தாய்; மகிழ்ச்சியில் ஊர் மக்கள்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
அதைப் படித்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் (தி.மு.க) என்.அருண் நேரு அவர்கள், விகடன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, தான் அந்த மாணவிக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பூமாரி தன் தாத்தாவுடைய செல்போனைத்தான் உபயோகித்து வருவதாகவும், புதிய போன் கிடைத்தால் உதவியாக இருக்கும். இதோடு மருத்துவம் தொடர்பான பாடங்களைப் படிப்பதற்கும், தகவல்களைத் தேடுவதற்கும் இணைய வசதியோடு கூடிய ஒரு லேப்டாப் இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்த கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி பூமாரி கேட்ட ஸ்மார்ட் போன், லேப்டாப், 1 லட்சம் ரூபாய் பணத்தோடு விகடன் அலுவலகம் வந்தார் அருண் நேரு.
விகடன் குழும மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் மற்றும் அருண் நேரு ஆகியோர் பூமாரிக்கு புதிய ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணத்தையும் வழங்கினார்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு பூமாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் இதைப் பெற்றுக் கொண்டார்கள்.
அப்போது பூமாரியிடம் பேசிய அருண் நேரு, "எவ்ளோ கஷ்டம் வந்தாலும் படிப்பை மட்டும் விட்டுடாதீங்க. படிப்பு உங்களோடு இருந்தால் ஒரு படையே உங்களோடு இருப்பது மாதிரி. நீங்கள் படித்து முன்னேறி இந்தச் சமூகத்துக்குப் பணியாற்றணும். மற்றவர்களுக்கு ஊக்கமாக இருக்கணும்.
எளிய பின்னணியிலிருந்து இந்த இடத்துக்கு வந்திருக்கீங்க. உங்களோடு நாங்க துணைக்கு இருக்கிறோம். பணம் எப்போது வேண்டுமென்றாலும் கிடைச்சுடும். ஆனா, படிப்பு மட்டும் கிடைச்சுடாது. படிப்புதான் உங்களை உயர்த்தும். உங்க படிப்புக்கு எந்த உதவியும் செய்ய தயாரா இருக்கிறோம்.
படிப்போடு அருமையைத் தெரிஞ்சுகோங்கோ. அதுதான் உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கு. எந்த உதவியும் தயங்காமல் கேளுங்க” என்று நம்பிக்கையூட்டினார்.
விகடன் குழும மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் பேசியபோது, “நல்லா படிங்க. உங்கள் முயற்சிக்கு விகடன் துணையாக இருக்கும். எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் விகடனைத் தொடர்பு கொள்ளலாம். உதவிக்கு உங்கள் சகோதரர்களாகிய நாங்கள் இருக்கிறோம்” என்றவர் வீட்டில் உள்ளவர்களின் நலன் குறித்தும் விசாரித்தார்.
உதவிகளைப் பெற்றுக் கொண்ட பூமாரி நெகிழ்ச்சியோடு நம்மிடம் பேசியபோது, “விகடன்ல என்னைப் பத்தி கட்டுரை வந்ததும் நிறையப் பேரு உதவி செய்ய விசாரிச்சாங்க. உதவி செய்றதாவும் சொல்லியிருக்காங்க. அந்த வகையிலதான் அருண் நேரு ஐயா, இந்த ஸ்மார்ட் போனையும், லேப்டாப்பையும், 1 லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்து உதவி பண்ணியிருக்கிறாரு.
இதை நன்றியோடு நினைச்சுப் பார்க்கிறேன். எங்க தாத்தா ஆடு மேய்க்கிறாரு. அம்மா, விறகு வெட்டுறது, கூலி வேலைக்குனு போறாங்க. அவங்க பள்ளிக்கூடமே போனதில்ல. எங்க குடும்பத்துல நான்தான் முதல் பட்டதாரி. அரசுப் பள்ளியிலதான் படிச்சேன்.
எனக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்க. அவங்களும் படிக்குறாங்க. முதல் முயற்சியில நீட் தேர்வுல எழுதி பல் மருத்துவம்தான் கிடைச்சது. எப்படியும் மருத்துவர் ஆகணும்னுங்கற எண்ணத்தோடு மீண்டும் படிச்சேன். ரெண்டாவது முறை நல்ல மார்க் எடுத்து சென்னையில் இருக்கிற தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைச்சிருக்கு.
எங்க தாத்தா போனைத்தான் பயன்படுத்திட்டு இருந்தேன். எனக்கு ஸ்மார்ட் போனை எப்படி பயன்படுத்தணும்னுகூட தெரியாது. விகடன் மூலமா அருண் நேரு ஐயா நல்ல போனா தேடிப்பிடிச்சு வாங்கிக் கொடுத்திருக்காரு. லேப்டாப்பும் நல்ல கம்பெனியா வாங்கிக் கொடுத்திருக்காரு.
விகடன் மூலமா கிடைச்ச இந்த உதவிகள என் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன். நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி, என்னை மாதிரி ஏழ்மை நிலையில படிக்குறவங்களுக்கு உதவணும். அதுதான் என் ஆசை. ‘எவ்வளவு கஷ்டம் வந்தாலும், படிப்பை மட்டும் விட்டுடக்கூடாது’னு சொன்னாங்க.
அத மனசுல வெச்சு கண்டிப்பா நல்லா படிப்பேன். எதிர்பார்க்காம கிடைச்ச இந்த உதவிக்கு விகடன்தான் காரணம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவிய அருண் நேரு ஐயா உதவியைப் பெருசா நினைக்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியாக.