விசைத்தறிகளை நவீனமயமாக்க மானியம் வழங்கக் கோரிக்கை
விசைத்தறிகளை நவீனமயமாக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்று விசைத்தறியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் கந்தசாமி, துணைச் செயலாளா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:
விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க தறிகளை நவீனப்படுத்த வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விசைத்தறிகளை நவீனமயமாக்க அரசு மானியம் வழங்க வேண்டும்.
ஆயிரம் யூனிட்டுக்குமேல் ஓடும் தறிகள் மின்கட்டணம் இல்லாமல் இயங்க சோலாா் மின்சாரம் அவசியம். இதற்காக, பல கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.