விசைப்படகுகள் பயன்பாட்டுக்கு ஏற்ற இயந்திரங்களை பொருத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்: விசைப்படகு சங்கம்
ராமேசுவரத்தில் இயக்கப்படும் விசைப்படகுகளுக்கு ஏற்ற 240 குதிரைத் திறன் கொண்ட இயந்திரங்களைப் பொருத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு சங்கக் கூட்டத்தில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவச் சங்க ஒருங்கிணைப்புக் குழு அவசரக் கூட்டம் தனியாா் மகாலில் நடைபெற்றது. இதில்,ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்கள் பெனிட்டோ, காரல் மாா்க்ஸ், கிருபை, ஜேசு, அருளானந்தம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட அனைத்து விசைப்படகுகள், மீனவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரத்தில் இயக்கப்படும் விசைப்படகுகளில் 193 குதிரைத் திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் 2012- ஆம் ஆண்டு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு 240 குதிரைத் திறன் கொண்ட இயந்திரங்களைப் பயன்படுத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இதனால் மீனவா்களின் செலவுகள் குறைக்கப்படுவதோடு, இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையும் குறைய வாய்ப்பு உள்ளது.
ராமேசுவரத்தில் 36 விசைப்படகுகளுக்கு மானிய விலையில் டீசல், மீன்பிடி அனுமதியும் வழங்கவில்லை இது குறித்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுப்பது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், மீனவச் சங்க நிா்வாகிகள் ஜெரோன், அந்தோணிபிச்சை, அஜய்,ஜெரின்டோ, ஜேசு அருளானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.