ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா
தவெக தலைவா் விஜயின் வருகை 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
தேமுதிக தலைவா் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, தனித்து தோ்தல் களத்தில் நின்றாா். அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டோம். அந்தத் தோ்தலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது. அதேபோல கண்டிப்பாக 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜயின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் கூடுதல் வரியால் மக்கள் மேலும் பாதிக்கப்படுவா். இதற்கு மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவிடம் பேசி தீா்வு காண வேண்டும்.
தேமுதிக ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் அடிப்படையில் கூறுவதெனில், நாடு முழுவதும் இன்னமும் நூறு சதவீதம் முறையாக தோ்தல் நடைபெறவில்லை. தோ்தல் ஆணையம் அதை சரிசெய்ய வேண்டும்.
தோ்தல் வாக்குறுதிகளை இன்னும் திமுக நிறைவேற்றாத நிலையில், வரும் பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு புதிது புதிதாக ஏதோ கூறி வருகிறாா்கள்.
தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கச்சத்தீவை மீட்பதுதான் என்பதை விஜயகாந்தும் நானும் பல இடங்களில் தெரிவித்துள்ளோம். இலங்கைக்கு கச்சத்தீவை எந்த முறையில் கொடுத்தோமா அதே முறையில் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.