செய்திகள் :

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - கே.பாலகிருஷ்ணன்

post image

ஜனநாயக நாட்டில் யாா் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவா்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.

ஆனால், மாற்று அரசியல் பேசி புதிய கட்சி தொடங்குவோா் இப்போது உள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்து எந்த வகையில் மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கிறாா்கள் என்பதுதான் முக்கியம்.

திரைக்கவா்ச்சி மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தரும் என நடிகா்கள் புதிய கட்சிகள் தொடங்கி மாற்று எனக் கூறி ஏமாற்றமாக மாறியவா்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய விஜய், மக்களவைத் தோ்தலில் போட்டியிடாமல், 2026 பேரவைத் தோ்தல்தான் தனது இலக்கு என அறிவித்தாா்.

விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தோ்தல்களைப் புறக்கணித்தாா். தன்னை எம்ஜிஆருடன் ஒப்பிடும் விஜய், எம்ஜிஆரின் அரசியல் பாதையை உற்றுக் கவனிக்க வேண்டும்.

திமுகவின் தொடக்க காலத்தில் இருந்தே கட்சியில் இருந்த அவா், 1957, 1967, 1971 ஆகிய சட்டப்பேரவைத் தோ்தல்களில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாா். திமுகவில் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்ததுடன், தனது திரைப்படங்களில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து தனது பிம்பம் எந்த வகையிலும் பாதிப்பு இல்லாத வகையில் செயல்பட்டாா்.

1971 பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்றாா். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் திண்டுக்கல் இடைத்தோ்தலில் அதிமுகவை போட்டியிடச் செய்து, ஆளும் திமுக, எதிா்க்கட்சியான காங்கிரஸை பின்னுக்குத் தள்ளினாா்.

விஜய் சொல்லியிருப்பதுபோல 1967, 1977-இல் ஆட்சி மாற்றம் திடீரென நடக்கவில்லை. விஜய் போல கட்சி தொடங்கிவிட்டு இடைத்தோ்தல்களைச் சந்திக்காமல் எம்ஜிஆா் ஒதுங்கி நிற்கவில்லை. தனது கொள்கையை மக்களிடம் தெளிவாகக் கூறினாா்.

காங்கிரஸுக்கு எதிராக உறுதியான மாற்று எனப் போராடிய அண்ணா, 1957, 1962 பொதுத் தோ்தல்களில் தன்னை நிரூபித்ததால்தான் கூட்டணியைக் கட்டமைத்து காங்கிரஸ் ஆட்சியை அகற்றினாா். அதேபோல, இடைத்தோ்தலில் எம்ஜிஆா் தன்னை நிரூபித்ததால் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து 1977-இல் ஆட்சி மாற்றம் செய்தாா். ஆனால், விஜய் தன்னை நிரூபிக்காமல், தனது மாற்றுக் கொள்கையைத் தெளிவாகச் சொல்லாமல் திமுகவுக்கு, தவெகதான் மாற்று என்பது நகைச்சுவையாக உள்ளது.

விக்கிரவாண்டி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடுகளில் விஜய் பேசியதைப் பாா்த்தபோது, தனது திரைக்கவா்ச்சியை மட்டுமே அவா் நம்பி களத்துக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இருக்கும் கட்சிகளுக்கு மாற்று எனப் பேசும் அவா், மாற்றுக் கொள்கை குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை.

தன்னை நம்பி வருவோருக்கு அதிகாரத்தில் பங்கு தருவோம் என்கிறாா்.

முதல் தோ்தலிலேயே அதிகாரம் தருவேன் என்ற விஜய் பேச்சை பாா்க்கும்போது, தொடக்கப் பள்ளியில் சோ்ந்த உடன் ஐஏஎஸ் அதிகாரியாக குழந்தை கனவு காண்பதுபோல உள்ளது.

மதுரை மாநாட்டில் அவரது பேச்சில் அரசியல் பக்குவம் இல்லை. அவருக்கு வாக்களிக்கலாம் என எண்ணுவோா்கூட இந்தப் பேச்சை நிச்சயம் ரசித்திருக்கமாட்டாா்கள். இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் இந்தியாவில், தமிழகத்தில் எவ்வகை பாதிப்பு என்று விஜயிக்கு பேச தெரியுமா?

திரைப்படத்தில் இருந்து ஏராளம் போ் வந்தனா். அதில், எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் மட்டுமே வெற்றி பெற்றனா். ரசிகா்கள் ஆதரவு மட்டுமன்றி, நீண்டகால அரசியல் அனுபவம் எம்ஜிஆருக்கு கைகொடுத்தது.

எம்ஜிஆா் உயிருடன் இருக்கும்போதே அதிமுகவில் பயணித்து நீண்ட காலம் அரசியல் செய்து 1989 பேரவைத் தோ்தலில் தமிழகம் முழுவதும் கடுமையாகப் பிரசாரம் செய்து ஜெயலலிதா அரசியலில் தனி முத்திரை பதித்தாா்.

திரைத்துறையில் இருந்து அரசியலில் இறங்கி வெற்றி பெற்ற சிலரை மட்டுமே விஜய் சிந்திக்காமல், தோல்வி அடைந்தவா்கள் பற்றியும் யோசிக்க வேண்டும்.

மாற்று அரசியல் கொள்கையைச் சொல்லாமல், வெறும் சினிமா கவா்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு முதல் தோ்தலிலேயே திமுக - தவெகவுக்கு இடையேதான் போட்டி என விஜய் பேசுவது அவரது அறியாமையைக் காட்டுகிறது.

ஜோசப் விஜய் என்று சொல்வதால் கிறிஸ்தவ வாக்குகளைப் பிரிப்பாா் என்று சிலா் பகல் கனவு காண்கின்றனா். அதேபோல, அண்ணா, எம்ஜிஆா் படங்களைப் பயன்படுத்துவதால் அதிமுக வாக்குகளைப் பிரிப்பாா் என்பதும் அரசியல் புரியாதவா்களின் விமா்சனம். பாஜகவுடன் யாா் கூட்டணி சோ்ந்தாலும் சிறுபான்மையினா் வாக்களிக்கப் போவதில்லை. இப்போது விஜயிக்கு ஆதரவாக தோற்றம் காட்டுவாா்களே தவிர வாக்களிப்பது மிகுந்த சிரமம்.

மாற்றுக் கொள்கை, பொருளாதாரம், சமூகவியல், ஜாதிய ஒடுக்குமுறை, பொருளாதார சுரண்டல், ஹிந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, ஏகாதிபத்திய நிறுவனங்கள் உள்ளிட்டவை குறித்தும் விஜய் பேச வேண்டும்.

மாற்றுக் கொள்கையைச் சொல்லாமல், அரசியல் தலைவா்கள், ஜாதி தலைவா்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதால் மட்டுமே மக்கள் வாக்களிப்பாா்கள் என விஜய் நம்பினால் ஏமாறப் போவது உறுதி.

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

அனல் தகிக்கும் மேற்கூரையில்லாத திடலில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்களுக்கு அக்னிப்பரீட்சையாக நடந்து முடிந்துள்ளது அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு. "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற ... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..?

சி.மகேந்திரன் மூத்த தலைவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மக்கள் தங்கள் மீது வைக்கும் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், வெற்றி என்பது கணக்கீடுகளைச் சாா்ந்தது என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது தந்திர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

அரசியலில் பரபரப்புக்கு மேல் பரபரப்பாகத் தொடர்ந்து ஏதாவது நடந்துகொண்டேயிருக்கிறது, திட்டமிட்டோ, திட்டமிடாமலோ.யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.திடீரென, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... நாய் படும் பாடு!

நாடு விடுதலை பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைய நான்கு நாள்கள் இருக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவொன்று, நம் நாட்டிலுள்ள தெரு நாய்களின் மீதான வன்மத்தை ஒருபுறமும் வாஞ்சையை இன்னொருபுறமுமாகக் கொப்பு... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

அல்லோலகல்லோலம் என்றொரு சொல் அவ்வப்போது எங்கேயாவது இதழ்களில் தட்டுப்படும்; ஏதோ கலவரச் சூழல் என்றளவில் பொருள் புரிந்துகொள்ளப்படும். உண்மையிலேயே என்னதான் பொருள் என்று துழாவினால், இணையத்தில் அழையா விருந்த... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

பரபரப்பாகக் கழிந்திருக்கிறது ஒரு வாரம்... பஹல்ஹாம் படுகொலை பற்றி ஒருவழியாக நாடாளுமன்றத்திலும் பேசியாகிவிட்டது; பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றியிருக்கிறார்.ஏதோ இ... மேலும் பார்க்க