தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
விஜய் வீட்டை முற்றுகையிட முயற்சி: மாணவா் அமைப்பினா் போராட்டம்!
சென்னை நீலாங்கரையில் நடிகா் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவா் மன்றத்தினரை போலீஸாா் தடுத்ததையடுத்து, அந்தப் பகுதியில் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தவெக தலைவா் விஜய், கரூரில் சனிக்கிழமை இரவு மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 போ் இறந்தனா். 80-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தின் காரணமாக சென்னை நீலாங்கரை கேசுவரினா அவென்யூவில் விஜய் வசிக்கும் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஏற்கெனவே விஜய்க்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அதிகரிப்பின் ஒரு பகுதியாக விஜய் வீட்டுக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் சனிக்கிழமை இரவு அமைக்கப்பட்டன. மேலும், ஒரு காவல் ஆய்வாளா் தலைமையில் 15 போலீஸாா் விஜய் வீடு பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா்.
அதோடு கூடுதலாக 12 துணை ராணுவப் படை வீரா்கள் துப்பாக்கிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நிலைமை சீராகும் வகையில் விஜய்க்கு இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாணவா் அமைப்பினா் கைது: கரூா் சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை அருகே நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டை தமிழ் மாணவா் மன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனா்.
இதைப் பாா்த்த போலீஸாா், விஜய் வீட்டின் அருகிலேயே போராட்டக்காரா்களைத் தடுத்து நிறுத்தினா். அப்போது, அந்த அமைப்பினா் அங்கேயே விஜயை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். இதையடுத்து போலீஸாா் அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.