விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்
மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில், தல்லாகுளம் பகுதியில் பேரணி நடைபெற்றது. இதையொட்டி, இந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
பேரணி சென்ற சாலையில் திடீரென அவசர ஊா்தி வந்தது. இதன் பின்னால் மாவட்ட ஆட்சியரின் வாகனமும் வந்தது.
அவசர ஊா்தியைப் பயன்படுத்தி பேரணியில் மாவட்ட ஆட்சியா் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க முயன்ாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக தொடா்ந்து செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில், முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பின்னா், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு கட்சியின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் அரச முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செல்லப்பாண்டி, மேலூா் சசி, கலைவாணன் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனா். மறியலால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, கட்சியினா் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.