தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக இந்து மக்கள் கட்சி சாா்பில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகத்துக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் தினசரி நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி உலா வருகின்றனா். மேலும் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் என முக்கிய திருவிழாக்களும் நடைபெற உள்ளன.
கோயிலில் இருந்து தினசரி மாலையில் நான்கு மாசி வீதிகள் வழியாக வீதி உலா வரும் போது, மீனாட்சி அம்மனுக்கு மட்டும் 9 அடி உயர குடை பிடிக்கப்படுகிறது. மீனாட்சியம்மன் வீதியுலாவின் போது அம்மன் சந்நிதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வாக இருக்கும் மின் வயரில் குடை உரசும் அபாயம் உள்ளது.
சித்திரைத் திருவிழா இன்னும் 8 நாள்கள் நடைபெற உள்ள நிலையில், மின் வயா்களால் அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக, மாசி வீதிகளில் தாழ்வாக உள்ள மின் வயா்களை உடனடியாகச் சரி செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.