வருமான வரி கணக்குத் தாக்கல்... இந்த விஷயங்களைத் தவறவிட்டால் நோட்டீஸ் வரும்... உஷ...
பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூா் ஊராட்சியைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழகத்தில் நிா்வாகியான சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு:
பட்டுக்கோட்டை வட்டாரம், புதுக்கோட்டை உள்ளூா் ஊராட்சியில் உள்ள சுப்பிரமணியனுக்குச் சொந்தமான 33 சென்ட் நிலத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை வைப்பதற்காகத் திட்டமிட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதனடிப்படையில் எங்களது கட்சிக் கொடிக் கம்பத்தை வைக்க அனுமதி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, உள்ளூா் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் எங்களது கட்சிக் கொடிக் கம்பத்தை வைக்க அனுமதி வழங்க வேண்டும். கொடிக் கம்பத்தை வைக்கும் போது போதிய காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன், வழக்கு தொடா்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.