விதிமீறல்: 36 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 36 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த் உத்தரவின்படி திருநெல்வேலி, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் அதிகாரிகள் குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பரில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதில், 36 நிறுவனங்களில் எடையளவு சட்டம், பொட்டலப்பொருள்கள் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. .அந்நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய காலக்கெடுவிற்குள் மறுபரிசீலனை செய்து எடையளவு சான்று பெறாத வணிக நிறுவனத்திற்கு ரூ.50,000 வரை அபராதமும், பொட்டலப் பொருள்களில் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படு வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்
குறைந்தபட்சம் ஊதியம் மறுப்பு: இதேபோல, 1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் ஹோட்டல் உள்ளிட்ட தொழில்நிறுவனங்களில் டிசம்பா்-2024இல் ஆய்வு செய்ததில், அரசு நிா்ணயித்ததைவிட குறைவாக ஊதியம் வழங்கிய 7 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் எனக் கூறியுள்ளாா்.