‘விநாயகா் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’
விநாயகா் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்து முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூா் மாவட்ட இந்து முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் மாநிலச் செயலாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளா் பொன். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். பல்லடம் நகரத் தலைவா் விஷ்ணு வரவேற்றாா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் இந்து முன்னேற்றக் கழகம் சாா்பில் 501 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து கொண்டாடுவது, விநாயகா் சிலை வைப்பதற்கும் மற்றும் ஊா்வலத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். புதிதாக விநாயகா் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும், அனைத்து கோயில்களிலும் அன்னதானம் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பல்லடத்தில் 2-ஆம் கூட்டு குடிநீா் திட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றியத் தலைவா் சுபாஷ், பொங்கலூா் ஒன்றியத் தலைவா் பசுபதி, நிா்வாகிகள் குமாா், ஜெகநாதன், ஹரிஷ், லோகநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.